எமது நாட்டை பெரும் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு இராணுவத்தினர் மீட்டுள்ளனர். எனவே, இராணுவத்தினரின் இந்தப் பணிக்கு தென்மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும். நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்தக்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்ற செய்தியையும் உலகுக்கு தென்மாகாண மக்கள் பறைசாற்ற வேண்டும்” என்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் மகளிர் அமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சில சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் பொய்யான சாட்சிகளை தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறான நிலைமையே இன்று தோன்றியுள்ளது. அரசாங்கத்திற்கே எதிர்க்கட்சி இருக்கவேண்டும். மாறாக நாட்டுக்கு எதிர்க்கட்சி இருக்கக் கூடாது.
இன்று உங்களுக்கோர் கடமை உள்ளது. அதாவது, இந்த நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்த குற்ற நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சி மற்றும் எமது வீரர்களை கட்டிக்கொடுக்கும் சதித்திட்டங்கள் என்பவற்றிற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
எமது இராணுவ வீரர்கள் இந்த நாட்டை மீட்டதை நீங்கள் அனுமதிப்பதாக தேர்தல் மூலம் கூறுங்கள். இராணுவ வீரர்களை யுத்த நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்ற செய்தியை உலகத்திற்கு வழங்குங்கள் என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்தக்குற்ற விசாரணைகள் வேண்டும் என சர்வதேசம் குரல் எழுப்பும் இவ்வேளையில், அதற்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் எழும் என்பதும், தேர்தல்களையும் கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக