தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர நடவடிக்கை - சோனிய
தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.
இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.
அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக