இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எமது பிள்ளைகள் புனர்வாழ்வு பெற்று விரைவாக குடும்பத்தாருடன் இணைந்துவாழும் நிலை உருவாக வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  வெள்ளி, 14 மே, 2010


பயங்கரவாத யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று தமிழ் மக்களின் மனதை வெல்வதுடன் அவர்களின் வளமான வாழ்வை அபிவிருத்தி செய்வதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அழகான எமது இலங்கைத் தீவில் மீண்டும் அழகொளிரும் தருணம் ஏற்பட்டுள்ளதுடன் சமாதானப் பூக்களும் பூக்கத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் நீக்கப்பட்டு மூவின மக்களும் அச்சமின்றி வாழக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் நிலவி வந்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் உயிர் அச்சுறுத்தல் நீங்கப் பெற்று மக்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உறுதியான தலைமையின் கீழ் மக்கள் இன்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கக் கூடிய வகையில் சூழ்நிலையை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமாதான முன்னெடுப்புக்களுக்காக அழைத்திருந்த போதும் அதனை மறுத்த புலித்தலைமை சமாதான முன்னெடுப்புகளை முறித்துக் கொண்டது.
இதனால் தமிழ் இளைஞர்கள் விரும்பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போரின் மீது எமது மக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் நலன்புரி முகாம்களில் அவல வாழ்வு வாழ வேண்டிய அவலம் தோன்றியது.
எனவே பயங்கரவாதத்தால் உயிரிழந்த அத்தனை பேரையும் இன்றைய நாளில் நினைவு கூறும் அதேவேளை கொடும் போரின் போது எமது மக்களுக்கு படையினர் வழங்கிய பல்வேறு உதவி வேலைத்திட்டங்களுக்காக நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.
பயங்கரவாத யுத்தத்தை படையினர் எப்படி வெற்றி கொண்டனரே அதேபோன்று உயிர் உடமைகளை இழந்த நிலையில் மீள்குடியேறி வரும் மக்களின் மனங்களை வெல்வதுடன் அவர்களது எதிர்கால வளமான வாழ்வின் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
அதேநேரம் விரும்பியோ விரும்பாமலோ புலிகள் இயக்கத்தின் சார்பில் கடந்த கால அழிவு யுத்தத்தில் பங்கேற்றிருந்த எமது இளைஞர் யுவதிகள் கூடிய விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் அவர்களது குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழும் நிலை விரைவாக ஏற்பட வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் எதிர்காலத்திலும் படையினர் தமது பணிகளில் மக்களுக்கான பணிகளையும் ஆற்றி அழிந்து சிதைந்துபோன வடக்கு, கிழக்கு பகுதிகளுடன் முழுமையான தேசத்தையும் சிறந்த அபிவிருத்தியின் மூலம் தூக்கி நிறுத்த வேண்டும்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் இந்த வெற்றிக்காக தமது உயிர்களை தந்த அனைத்து தரப்பினரையும் இந்நாளில் நினைவு கூருகின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு முன்பாக அமைக்க்பபட்டிருந்த இருப்பிடத்திற்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் இசை அணிவகுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து தேசியக் கொடியினை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வடமாகாணக் கொடியினை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியும் இராணுவக் கொடியினை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன இராஜகுருவும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து இந்து கிறிஸ்தவ முஸ்லிம் பௌத்த மதகுருமார்களின் ஆசிச் செய்திகளைத் தொடர்ந்து தேசிய போர் வீரர்கள் தினைத்தையொட்டி குருமார்களுக்கு நினைவுப் பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
வரவேற்பு நடனத்தை அடுத்து காலாட்படை விமானப்படை கடற்படை வீரர்களும் பொலிஸ் வீரர்களுக்கும் மாணவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கியதுடன் தாமரை மலர்களையும் வழங்கினர்.
அங்கவீனமுற்ற படையினருக்கும் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் படைத்தரப்பினர் கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பல்வேறு அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr