வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத் தங்கல் முகாம்களுக்கும் ,இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுமதியளித்துள்ள அரசாங்கம் போக்கு வரத்து வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை வவுனியா ,மன்னார் ,கிளிநொச்சி ,துணுக்காய் ஆகிய இடங்களுக்கு அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றார்கள்.
ஏற்கனவே ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் ,மீளக் குடியமர்ந்த மக்களையும் பார்வையிட ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.
வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 10 பேர் இக்குழுவில் இடம்பெறவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர்.
கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர். திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பாக தெரிவித்தார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக