இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-
எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் எந்தவொரு தடையுமின்றி இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.
அதற்காக ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வேனே தவிர பிரபாகரனின் தாய், தந்தையர் கோடிக்கணக்கான ரூபாய் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:
நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவேன் என நான் அன்று வழங்கிய வாக்குறுதியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம். முன்பு கூட்டங்களுக்கு வரும் ஆதரவாளர்கள் மாலையானதும் தமது வீடுகளுக்கு சென்று விடுவர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்நிலை காணப்பட்டது.
எனினும், இன்று இக்கூட்டத்துக்கு வந்த அனைவரும் இரவாகியும் போகாமல் இருப்பது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் கிடைத்த பயனாகும். பயங்கரவாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டு சென்றபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
எமது நாட்டின் தலைவர்கள் சில வெளிநாடுகளுக்குச் சென்று கூட யுத்தத்தினை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை.
வெளிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது கூட எதிர்க்கட்சித் தலைவர் அவற்றை வழங்கவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே முயற்சிக்கின்றோம். அதையும் தடைச்செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சபாநாயகரைக் கூட தெரிவு செய்துகொள்ள முடியாத பாராளுமன்றம் ஒன்றே எமக்கிருந்தது. எனினும், இன்று எமது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் பலர் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.
சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டத்தினையும் புகைத்தல் கட்டுப்பாட்டுத் திட்டத்தினையும் நாம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். இதன் மூலம் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழந்த போதும் நாட்டில் சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நாம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பது எமக்குத் தெரியும். நாட்டில் முறைகேடுகளும் வீண்விரயமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. இவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் அடுத்து ஈடுபடவுள்ளோம்.
பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் ஒழித்தது போன்று நாட்டின் முறைகேடுகளையும் வீண்விரயத்தையும் ஒழித்துக் காட்டுவோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக