இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!

JKR  சனி, 19 டிசம்பர், 2009


எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று..

தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின.

இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை.

மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர்

மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr