இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'கிழக்கை வடக்குடன் இணைப்பதா, இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்'

JKR  சனி, 24 மார்ச், 2012


கி ழக்கை வடக்குடன் இணைப்பதா அல்லது இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசி வருகின்றனர். தற்போது கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எமது மாகாணத்தின் கல்வித்துறையும் இன்னும் சிறந்ததாகவும் துரிதமாகவும் வளர்ச்சியடைய வேண்டுமென்பதே எமது நோக்கம். இதன் அடிப்படையிலேயே நாம்; செயற்பட்டு வருகின்றோம். நவீன தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் எமது மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்கும். இவ்வாறான துரிதமான அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அரசியலின் பங்கு அளப்பெரியது. நாம் கிழக்கு மாகாணசபையினை பொறுப்பெடுத்த பின்னர்தான் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. தொடர்ந்தும் துரித அபிவிருத்தியுடனான தனித்துவமான பிரதேசமாக எமது கிழக்கு மாகாணம் இருக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்கப்போவதில்லை. தமிழன், தமிழீழம் என்று மக்களை உசுப்பேத்தினார்களேயொழிய, இதுவரையில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை. இத்தனை அழிவுகளை சந்தித்த பின்னர் அவர்கள் இன்று மாகாணசபை முறைமை பற்றிப் பேசுகின்றனர். மாகாணசபை முறை மூலம் துரிதமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து வருகின்றோம். எமக்குப் பின்னரே கூட்டமைப்பினர் மாகாணசபை பற்றிப் பேசுகின்றனர். கூட்டமைப்பினர் மக்களுக்காக எதனையும் செய்யத் தயாராக இல்லை. அவர்கள் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யப் போவதுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசுவதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நான் கடிதம் அனுப்பி மூன்று மாதங்களாகின்றன. இன்னும் பதில் கிடைக்கவில்லை. கூட்டமைப்பின் உபதலைவர் செல்வராசா நிகழ்வொன்றில் பேசுகையில் விரைவில் இதற்கான பதில் கிடைக்குமென கூறினார். அவர் இதனைக் கூறியும் ஒரு மாதம் கடந்துவிட்டது. இன்னமும் எந்தவித பதிலும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக அனுப்பப்பட்ட கடிதமொன்றிற்கு பதில் கடிதம் அனுப்ப முடியாத கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்யப் போகின்றனர். கிழக்கை வடக்குடன் இணைப்பதற்கு வடக்கு தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை கிழக்கை வடக்குடன் இணைப்பதா அல்லது இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கடந்தகால அனுபவங்கள் எமக்கு பல படிப்பினைகளை தந்திருக்கின்றன. வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் கிழக்கு மாகாணம் இவ்வாறு துரித அபிவிருத்தி காண முடியாது. வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன். மட்டக்களப்பான் மடையனென்றும் மந்திரவாதிகளென்றும்; சொல்வார்கள். நாம் அவர்கள் பக்கமிருந்தால் எம்மை நல்லவர்களென்று சொல்வார்கள். ஏதாவது அவர்களுக்கு எதிராகச் சொல்லிவிட்டால் துரோகியென்பார்கள். போராட்ட காலங்களில் பாரிய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே. அவ்வாறான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த போராளிகளை வெருகலில் படுகொலை செய்தார்கள். கடந்தகால கசப்பான அனுபவங்கள் எப்படி இருப்பினும் மாகாணசபை முறைமை மூலம் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தியடைய வேண்டும். எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்பதே எமது எண்ணம். இதற்கிணங்க மக்களும் சந்தித்து உண்மைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr