
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவராவார்.
ஓய்வு பெற்று ஆறு மாத காலத்துக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைக்குட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரம் உள்ளது.
எனவே இதன் அடிப்படையில் அவர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை சந்திப்பதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு அவரது சட்டத்தரணிகளுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கியுள்ளது. அத்துடன் அவருடைய கோரிக்கைகளுக்கிணங்க முழுமையான மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, விமானப் படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பேச்சாளர் கப்டன் அதுல செனரத், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரஷாந்த ஜயக்கொடி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அங்கு ஊடகவியலாளர் மத்தியில் தகவல் வழங்குகையிலேயே அமைச்சர் கெஹெலிய மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது
ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இராணுவ பொலிஸாரால் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக்காவலில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இராணுவ குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு உத்தியோகத்தரோ அல்லது இராணுவ வீரரோ இராணுவ சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அத்துடன் அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருப்பாராயின் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்துக்குள் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கமைய இராணுவத்தின் 57ஆவது சட்டத்தின் பிரகாரம் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட முடியும்.
அந்தவகையில் இராணுவ சட்டதிட்டங்கள் மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை, பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருக்கும்போது அரசியல் தொடர்புகள் பேணப்பட்டமை, இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக செயற்பட்டமை மற்றும் இராணுவத்துக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி என்ற ரீதியில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு பூரண பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரினூடாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
இராணுவ நீதிமன்றத்திலேயே அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெனரல் பொன்சேகா சார்பில் அவர் விரும்பிய சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியும். அதற்கான அனுமதி இராணுவ சட்டத்தில் உண்டு.
அவரைப் பார்வையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க முடியும். அத்துடன் அவருக்கு மருத்துவ வசதிகள் தேவைப்படின் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட நாட்களாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையினையும் முன்னெடுக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் மிகவும் கவனமாகவே விசாரணை நடத்தப்பட்டு தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதானது முற்றும் முழுதான சட்ட நடவடிக்கையாகும். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதே தவிர எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. பொய்ப் பிரசாரங்கள் உண்மையாகிவிட முடியாது.
இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகள் முடிவடைந்ததும் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக