இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010


கடன் பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டங்கள்
கடன் பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டங்கள்

கிரேக்கத்தின் கடன் நெருக்கடியை சமாளிக்க உதவுவதில் ஐரோப்பிய தலைவர்கள் உடன்பாடு

கிரேக்கம் தனது கடன் நெருக்கடியை சமாளிக்க உதவுவது என்பதில் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடியுள்ள ஐரோப்பியத் தலைவர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

யூரோ நாணயம் புழங்கும் பிராந்தியத்தில் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்கத் தேவையான ஒருங்கிணைந்த மற்றும் திடமான நடவடிக்கைகளை தாம் எடுப்போம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஹெர்மன் ஃபன் ரோம்புய் கூறினார்.

கிரேக்கம் தனது வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறையில் நான்கு சதவீதத்தையாவது குறைக்கும் வகையில் இவ்வருடம் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரஸ்ஸல்ஸ் கூட்டத்தின் விளைவு பெரும்பாலும் முன்பே எதிர்பார்க்கப்பட்டிருந்தபடியால், ரோம்புய்யின் கருத்து வர்த்தக சந்தையில் பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஆனால் அவரது அறிக்கையில் விபரங்கள் போதுமான அளவு இல்லை என்பதால் சில ஆய்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்.


வங்கி வைப்புக்கள் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றிய- அமெரிக்க உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

வங்கி வைப்புகள் தொடர்பான விபரங்களை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யும் உடன்படிக்கை ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

கணினி, தொலைபேசி போன்றவற்றின் வழியாக செய்யப்படும் சர்வதேச வங்கி வர்த்தக பரிமாற்றங்களை கையாளும் நிறுவனத்திடமிருந்து அந்த விபரங்களைப் பெற்று சர்வதேச பயங்கரவாத சந்தேக நபர்களின் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க அமெரிக்கா விரும்புகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முடிவு, இந்த ஒப்பந்தத்தை உருவாக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளை மூக்குடையச் செய்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முடிவினால் தான் அதிருப்தியடைவதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒத்துழைப்புக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஈரானில் எதிர்க்கட்சிப் பேரணிகளுக்கு எதிராக ஆளுங்கட்சிப் பேரணிகள்

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள்
ஈரானில் ஆர்ப்பாட்டங்கள்
இரானின் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட முப்பத்து ஒன்றாவது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு எதிராக தம்முடைய பலத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்நாட்டின் ஆளுந்தரப்பினர்பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இரானிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத், இரான் ஒரு அணுசக்தி நாடாக உருவெடுத்துவிட்டது என்றும் 20 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத்தை அந்நாடு முதல் தடவையாக உற்பத்தி செய்துள்ளது என்றும் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணிகள் எந்த அளவில் இருந்தன என்பது தெளிவில்லாமல் இருந்துவருகிறது.

அப்பேரணிகளை இரானின் ஊடகங்கள் புறந்தள்ளியிருந்தன.

இணைய மற்றும் மின் அஞ்சல் சேவைகளும் தடைசெய்யப்பட்டும் மட்டுப்படுத்தப்பட்டும் இருந்தன.

அரசாங்க ஆயுத குழுக்களுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் பல இடங்களில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும்கூட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 12 பள்ளிச்சிறார்கள் பலி

இந்திய எல்லை வரைபடம்
இந்திய எல்லை வரைபடம்
இந்தியாவின் வட கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மாணவர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பள்ளிச் சிறார்கள் உயிரிழந்துள்ளனர். வேறு பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மூங்கில் மற்றும் வைக்கோலாலான குடிசைக்குள் குழந்தைகள் தங்கியிருந்தபோது, மின் இணைப்பு இல்லாதுபோக, வெளிச்சத்துக்காக சிறார்கள் மெழுகுவர்த்திகளையும், மண்-எண்ணெய் விளக்குகளையும் பயன்படுத்தியபோது தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியரங்கம்
எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் தாக்குதல்
எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் தாக்குதல்

அமைதி காக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் பொலிசாரால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்களையும் பாதுகாப்புப் படையினரையும் அமைதி காக்குமாறு பொன்சேகா கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டதாகவும் அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"சரத் பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை"-அனோமா பொன்சேகா

பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது அலுவலகத்திலிருந்து கடந்த திங்களன்று இழுத்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அனோமா பொன்சேகா
அனோமா பொன்சேகா

கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையென பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகா அவரது வழமையான மருத்துவரை சென்று அணுகுவதற்கான ஏற்பாட்டை உறுதி் செய்து தருமாறு அவரது குடும்பத்தினர் சர்வதேச செஞ்சிலுவை குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களை அமைதி காக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மூத்த அரச அதிகாரியான ரஜீவ விஜேசிங்க, எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அமைதியின்மையை ஏற்படுத்தி வன்முறைகளை தோற்றுவிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் செய்திகள் மற்றும் தகவல் வெளியீட்டு விடயங்களில் அரச அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றமைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

பதவியை துறப்பதாக தகவல்துறை அமைச்சர் அறிவிப்பு

இதற்கிடையில் பி.பி.சிக்கு கருத்து தெரிவித்த தகவல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தம்மை தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அனேகமாக ஜனாதிபதியே தமது அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மகரகம பகுதியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு பொலிசார் அவர்களைக் கலைத்துள்ளனர்.


சரத் பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தாபய ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவும் நார்வேயும் நிராகரித்துள்ளன

கோத்தாபய ராஜபக்ஸ
கோத்தாபய ராஜபக்ஸ
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, நிதி உதவிகளையும் பிற உதவிகளையும் அமெரிக்காவும் நார்வேயும் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் மறுத்துள்ளன.

அமெரிக்காவும், நார்வேயும் ஜெனரல் பொன்சேகாவின் பிரசாரத்துக்காக பெரும் பொருள் செலவிட்டுள்ளதாக தான் நூறு வீதம் நம்புவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய சமீபத்திய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டில் உண்மையேதும் இல்லை என்று அமெரிக்க தூதரகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இதே போல மறுப்பு வெளியிட்ட நார்வே தூதரகம், பிற நாடுகளின் தேர்தல்களில் தான் தலையிடுவது கிடையாது என்று கூறியுள்ளது.

அதே நேரம் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் உரிமைகளையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.


"பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்”-திமுக – காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை

நவீன் சாவ்லா
தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று திமுக – காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்னவே அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சில எதிர்க்கட்சிகள் கூறிய புகாரைத் தொடர்ந்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

புதிய தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நிறைவடைய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிக்கை கிடைத்தவுடன் எதிர்வரும் 17-ம் தேதி அது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதனன்று அறிவித்தது.

அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் சூசகமாகக் கண்டித்திருந்தார்.

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருந்தார்.


மண்டேலா விடுதலை பெற்று 20 வருடங்கள் பூர்த்தி

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு தினத்தை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

கேப்டவுன் நகரருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.

விக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர்.

தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது.

விடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன.

1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr