இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெனரல் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்:எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எந்த விதமான அடிப்படையும் அற்ற விதத்தில் அருவருக்கத்தக்க வகையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இங்கு சட்டம் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.இவ் விடயத்திற்கு இன்று சர்வதேசமே எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிராகரித்திருக்கின்றது.

எனவே, பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சட்டத்திற்கு முரணாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கான ஆராய்வுகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு மிகவும் நெருங்கிய ஆதரவுடன் செயற்பட்டு வருகின்ற இந்தியாவின் இந்து ஆங்கிலப் பத்திரிகை கூட ஜெனரல் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்திருப்பதுடன், இது தொடர்பில் அரசாங்கம் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு07, கேம்பிரிட்ஜ் ரெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்,

"உள்ளூர் மற்றும் சர்வதேசம் முழுதிலும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற அனைத்துத் தரப்பினரும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிகின்றனர். உலகில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இதுவே செய்தியாகவிருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா மீது சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாததன் காரணத்தால் இராணுவச் சட்டம் என்ற மாயையை உருவாக்கி, அவரது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த அருவருக்கத்தக்க செயற்பாடானது இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமையும் பறிக்கப்பட்டுள்ளதற்கு சமமானதாகும்.

இவ்விடயம் குறித்து சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இன்று செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற இந்து ஆங்கில பத்திரிகை பொதுவாக இலங்கை அரசாங்கத்திற்கு சார்பானதாகவே செயற்பட்டு வருகின்றது. அந்தப் பத்திரிகை கூட இன்று ஜெனரல் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது, அவரது கைதுக்கு அரசாங்கம் கூறுகின்ற எந்தவொரு காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அத்துடன், உடனடியாக அவரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகா மிக மோசமான முறையில் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் உள்ள ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் சரியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை. அவ்வாறான அழுத்தங்களுக்கு ஊட கங்கள் உட்பட்டுள்ளன.

ஒன்றுக்கொன்று முரண்

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க ஆகியோரால் தெரிவிக்கப்படும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். இவர்களது கருத்தின்படி ஜெனரல் பொன்சேகாவின் கைது இந்நாட்டின் எந்தவொரு சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

ஜெனரல் பொன்சேகா மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவரை கைதுசெய்வதற்கு உரியமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். இராணுவ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அப்படியே இருந்தாலும் ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்படும் அளவிற்கு அவர் எந்தவித குற்றங்களையும் செய்திருக்கவில்லை.

இராணுவ சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால், அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் அதற்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. மேலும், யுத்த வெற்றியாளரான ஜெனரல் பொன்சேகா மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு செய்வது சரியானதா என்று கேட்கவிரும்புகிறேன்.

சட்டத்திற்கு உட்பட்டதல்ல

தேசிய பாதுகாப்புச் சபை, இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டதல்ல. சட்டத்திற்கு உட்படாத தேசிய பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகளையும் சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கையில், பாதுகாப்புச் சபையில் இருந்துகொண்டு அரசியல் தொடர்புகளை வைத்திருந்ததாகவே ஜெனரல் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.

பாதுகாப்புச் சபையானது சட்டத்திற்கே உட்படாத நிலையில் மேற்படி குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.

அத்துடன், மேற்படி சபையில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே செயற்பட்டு வருகிறார். அவரும் இந்த சட்டத்திற்கு உட்பட்டுள்ளார். எனவே, இங்கு ஜெனரல் பொன்சேகா மீது பொய்யான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன.

புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கே.பி. மற்றும் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சுதந்திரமாகவும் சுகபோகத்துடனும் இருக்கின்ற நிலையில், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இராணுவத் தலைவரை இன்றைய அரசாங்கம் சிறைக்குள் தள்ளியுள்ளது.

இதுதான் அரசாங்கம் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கொடுக்கின்ற கௌரவமா என்று கேட்க விரும்புகின்றேன். நேற்று யுத்த வெற்றியாளனாக இருந்த இராணுவ வீரர் இன்று அரசாங்கத்தின் பார்வையில் தேசத்துரோகியாக நோக்கப்படுகின்றார்.

இன்று அரசாங்கத் தரப்பினருக்கு எதனைக் கூறுவதென்றே தெரியாதுள்ளது. அதனால், ஜெனரல் பொன்சேகா மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பொய்களையும் கூறிவருகின்றனர்.

இங்கு அரசியலமைப்பும் அதன் பிரகாரமான சட்டங்களும் முற்றாக மீறப்பட்டுள்ளன. இராணுவ சட்டத்தின் அடிப்படையிலும் கூட ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியை இவ்வாறு கைதுசெய்வதற்கு இடமில்லை. எது இடம்பெற்றிருந்தாலும் சட்டத்தின் பிரகாரமே அது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியான ஒருவர் அரசியல்வாதிகளுடன் பேசக்கூடாது என்பது தொடர்பில் இராணுவ சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை.

இங்கு சட்டவிரோதம் இடம்பெற்றுள்ளது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

இன்று (நேற்று) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து எமது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களது பதில்களையும் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தீர்மானிப்போம்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr